யோகக் கலாச்சாரத்தில், தட்சிணாயண காலத்தை (ஆடி முதல் மார்கழி வரை) சாதனா பாதை என்று அழைப்பார்கள். உத்தராயணத்தை (தை முதல் ஆனி வரை) ஞானப் பாதை என்று அழைப்பார்கள். அந்த 6 மாத சாதனா பாதையில் கடைசி மூன்று மாதங்கள் தேவியின் பாதையாக இருக்கிறது. சில சாதகர்கள் சில வகையான சாதனாக்களை அன்றைய தினத்திலிருந்து செய்யத் துவங்குவார்கள். அடிப்படையில் அந்த மூன்று மாதங்கள் பெண் தெய்வத்துக்கான காலகட்டம். இந்த காலகட்டம் தேவிக்கு உரியது. இந்த காலகட்டத்தில் பூமி கனிவாகிவிடுகிறது. பூமியின் வடக்கு அரைகோளப் பகுதி மென்மையாகிவிடுகிறது. ஏனென்றால் இச்சமயத்தில் பூமியின் வடக்குப் பகுதிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் குறைவாகக் கிடைக்கிறது. எனவே அனைத்துமே மென்மையாகி, பெண் தன்மை மிகுந்தவையாகிவிடுகின்றன. எதுவும் மிகத் துடிப்பாக இருப்பதில்லை. எனவே இது பெண்மையின் காலகட்டம் என்று அழைக்கப்படுகிறது. எனவே பெண்மை காலகட்டத்தின் துவக்கம்தான் நவராத்திரி அல்லது தசரா. இப்பண்டிகை முழுக்க முழுக்க தேவிக்கு உரியது. நவராத்திரி, இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் ஒரு பயணம். இந்த ஒன்பது நாட்களும் தமஸ், ரஜஸ் மற்றும் சத்வ என்னும் மூன்று அடிப்படை குணங்களுக்கு தக்கவாறு பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று நாட்கள் துர்கா, காளி போன்ற தீவிரத்தன்மையிலிருக்கும் தேவிகளுக்கு உரிய ‘தமஸ்’ என்று வகைப்படுத்தப்படுகின்றன. அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியோடு தொடர்புடையவை. மென்மையான ஆனால் உலகியல் சார்ந்த பெண்தெய்வங்களுக்கு (ரஜஸ்) உரியவை.

கடைசி மூன்று நாட்கள் அறிவு, ஞானம் போன்ற மற்ற விஷயங்களோடு தொடர்புடைய சரஸ்வதி, அதாவது சத்வ குணத்தோடு தொடர்புடையவை. கடைசி நாள், அதாவது பத்தாம் நாள் விஜயதசமி. அதாவது நீங்கள் இந்த மூன்று குணங்களையும் வெற்றி கொள்கிறீர்கள் என்று பொருள். இந்த மூன்று குணங்களில் எந்த ஒன்றின் மீது நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களோ அது உங்கள் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வழியில் அழைத்துச் செல்லும். நீங்கள் தமஸில் கவனம் செலுத்தினால் ஒருவகையில் சக்தி வாய்ந்தவராவீர்கள். ரஜஸில் கவனம் செலுத்தினால் மற்றொரு வழியில் பலம் பெற்றவராவீர்கள். சத்வத்தில் கவனம் செலுத்தினால் முற்றிலும் மாறுபட்ட ஒரு வழியில் வலிமை பெற்றவராவீர்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து நீங்கள் சென்றால் அது முழுமையான விடுதலை. இந்த மூன்றையும் நீங்கள் வென்றுவிட்டால், அன்றைய தினம்தான் விஜயதசமி-வெற்றியின் திருநாள். “நீங்கள் தேவியின் பக்தராக இருந்தால், உங்களால் புரிந்து கொள்ள முடியாத பல கோடி வழிகளில் அவள் உங்களுக்கு அருள் புரிவாள்.”

நன்றி – tamilblog.ishafoundation.org